வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன; வேட்பாளா்களை தேர்வு செய்ய திணறும் கட்சிகள்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதா உள்பட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்ய திணறி வருகின்றன.

Update: 2023-04-10 21:31 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதா உள்பட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்ய திணறி வருகின்றன.

வேட்புமனு தாக்கல்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் தொடங்குகிறது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கடந்த 6 மாதங்களாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. ஆனால் ஆளும் பா.ஜனதா இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. அக்கட்சி கடந்த 3 நாட்களாக டெல்லியில் வேட்பாளர் பட்டியல் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஆனால் மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் அக்கட்சிகள் திணறி வருகின்றன. டிக்கெட்டுக்கு கடும் போட்டி நிலவுவதால், யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்று முடிவு எடுக்க முடியாமல் அக்கட்சிகள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன.

பவானி ரேவண்ணா

பா.ஜனதா கட்சி தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் 15-க்கும் மேற்பட்டோருக்கு டிக்கெட் நிராகரிக்க திட்டமிட்டுள்ளது. அதனால் வேட்பாளர் பட்டியலை அறிவித்தால் அவர்கள் கட்சிக்கு எதிராக போராடினால், அது சிக்கலை ஏற்படுத்தும் என்று அக்கட்சி கருதுகிறது. காங்கிரஸ் கட்சி, கோலார், புலிகேசிநகர், சி.வி.ராமன்நகர் உள்ளிட்ட சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஹாசன் தொகுதியில் பவானி ரேவண்ணாவுக்கு அவரது கணவர் ரேவண்ணா டிக்கெட் கேட்டு வருகிறார். இதை அவரது சகோதரர் நிராகரித்துள்ளார். இதனால் அந்த தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ஆகமொத்தம், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்