ஒடிசா ரெயில் விபத்து பற்றி கர்நாடக பக்தர் உருக்கமான தகவல்
ஒடிசா ரெயில் விபத்து பற்றி கர்நாடக பக்தர் ஒருவர் உருக்கமான தகவலை கூறியுள்ளார்.
பெங்களூரு:
ஒடிசா ரெயில் விபத்து பற்றி கர்நாடக பக்தர் ஒருவர் உருக்கமான தகவலை கூறியுள்ளார்.
கர்நாடக பக்தர்
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து பற்றி பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கர்நாடகத்தை சேர்ந்த 110 பேர் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள சம்மேட் ஷிகர்ஜி ஜெயின் கோவிலுக்கு பயணம் செய்தனர்.
அவர்களுடன் பயணம் செய்த கர்நாடகத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரெயில் விபத்து பற்றி வீடியோ ஒன்றை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பெயர், விவரங்களை கூறவில்லை. ஆனால் ரெயில் விபத்து பற்றி அவர் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கர்நாடக பக்தர் கூறியிருப்பதாவது:-
பயங்கர சத்தம் கேட்டது
நாங்கள் சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் இருந்து ஜெயின் கோவிலுக்கு 110 பேர் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) காலை 11.30 மணி அளவில் புறப்பட்டோம். நாங்கள் பயணித்த ரெயில் ஒடிசா மாநில எல்லையை தாண்டி கொல்கத்தாவை நெருங்கிக் கொண்டிருந்தோம்.
அந்த சமயத்தில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. உடனே அதிர்ச்சி அடைந்த நான் உள்பட என்னுடன் பயணம் செய்தவர்கள் என்னவென்று பார்த்தோம். அப்போது தான் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து கிடந்தன. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கி மரண ஓலம் எழுப்பினர். அருகில் சென்று பார்த்தோம். நாங்கள் பயணித்த ரெயிலின் எஸ். 5 ரெயில் பெட்டி மற்றும் பொதுப்பெட்டிகள் 2-ம் விபத்தில் சிக்கி சிதைந்து கிடந்தது.
எல்லோரின் ஆசிர்வாதத்தால்...
அதிர்ஷ்டவசமாக நாங்கள் பயணம் செய்த ரெயில் பெட்டிகள் விபத்தில் சிக்கவில்லை. விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டிகளில் பயணித்த பலர் உயிர்பலியாகி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த பயங்கர விபத்தால் எங்கள் பயணம் தடைப்பட்டது. எங்களை பத்திரமாக உள்ளூர் ரெயில்வே அதிகாரிகள் மீட்டு மாற்று ரெயிலில் அனுப்பி வைத்தனர். நாங்கள் அனைவரும் தற்போது பத்திரமாக இருக்கிறோம். உங்கள் எல்லோருடைய ஆசிர்வாதத்தால் நாங்கள் ரெயில் விபத்தில் இருந்து தப்பி பத்திரமாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.