வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது; கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் மனு ஏற்பு- 588 பேரின் மனுக்கள் தள்ளுபடி
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமாரின் மனு ஏற்கப்பட்டது. அதே வேளையில் 588 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பெங்களூரு:
வேட்பு மனு தாக்கல்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) 211 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம்(20-ந் தேதி) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
முதல் நாளான கடந்த 13-ந் தேதியே 221 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்பிறகு, காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்த வண்ணம் இருந்தார்கள். குறிப்பாக வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று முன்தினம் 3 கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் திரண்டு வந்து மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
அதிகாரிகள் பரிசீலனை
ஒட்டு மொத்தமாக கர்நாடக சட்டசபை தேர்தலில் 3,632 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதாவது 3,632 பேரும், 5,102 மனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள். இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அந்தந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனகபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மாநில தலைவருமான டி.கே.சிவக்குமார் மனுவை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். பல தொகுதிகளில் வேட்பு மனுவில் சரியான தகவல்கள் இடம் பெறாததாலும், சொத்து உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்படாததாலும், அதுபோன்ற மனுக்களை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
ஜமீர் அகமதுகான் மீது புகார்
காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தனது ஸ்கூட்டரின் விலையை ரூ.94 ஆயிரத்திற்கு பதில் ரூ.90 லட்சம் என்று தவறாக குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாத அதிகாரிகள், காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டார்கள். பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜமீர் அகமதுகான் தவறான தகவல்களை அளித்திருப்பதாக கூறி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த தொகுதியில் ஜமீர் அகமதுகானை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள், அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று கூறி தேர்தல் அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தினார்கள். குறிப்பாக பாஸ்கரன் என்பவர் இலங்கையில் 2 சூதாட்ட விடுதிகள் நடத்துவதாக ஜமீர் அகமதுகான் மீது புகார் அளித்திருந்தார். இதற்கு ஜமீர் அகமதுகானின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஜமீர் அகமதுகான் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
பா.ஜனதா வேட்பாளர்கள்
இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று இரவுடன் நிறைவு பெற்றது. இதில் சவதத்தி-எல்லம்மா, அவுரத், ஹாவேரி(எஸ்.சி.), ராய்ச்சூர் மற்றும் சிவாஜிநகர் ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் தொடர்ந்து பரிசீலனையில் உள்ளன. அந்த 5 தொகுதிகளை தவிர 3,044 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் ஆண் வேட்பாளர்கள் 4,607 பேரும், பெண் வேட்பாளர்கள் 381 பேரும் உள்ளனர். 3-ம் பாலின வேட்பாளர் ஒருவர் உள்ளார்.
மேலும் பா.ஜனதா வேட்பாளர்களின் மனுக்கள் 224 தொகுதிகளிலும் ஏற்கப்பட்டன. அதுபோல் காங்கிரசின் வேட்புமனுக்களும் 223 தொகுதிகளிலும் ஏற்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி மேல்கோட்டை தொகுதியில் தர்ஷன் புட்டணய்யாவுக்கு ஆதரவு அளித்ததால் அந்த தொகுதியில் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 207 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் 212 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 135 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதுதவிர சுயேச்சை வேட்பாளர்கள் 1,334 பேரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனு ஏற்பு
இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிட கடந்த 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் உள்ள தகவல்களை ஆயிரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்திருந்தனர். அத்துடன் வேட்பு மனுவில் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த சொத்து விவரங்களிலும், வருமான வரித்துறைக்கு அவர் அளித்திருந்த சொத்து விவரங்களிலும் வித்தியாசம் இருப்பதாகவும், அதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது.
டி.கே.சிவக்குமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்த மறுநாள்(18-ந் தேதி) கனகபுராவுக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது சொத்துகள் பற்றிய தகவல்களை திரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், அவருக்கு பதிலாக கனகபுராவில் டி.கே.சுரேஷ் போட்டியிட உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் டி.கே.சுரேஷ் கனகபுரா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், நேற்று நடந்த வேட்பு மனு மீதான பரிசீலனையின் போது கனகபுராவில் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவையும் தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள். அந்த வேட்பு மனுவில் எந்த தவறும், சொத்துகளில் எந்த வித்தியாசமும் இல்லாத காரணத்தால், டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் டி.கே.சிவக்குமார் நிம்மதி அடைந்துள்ளார். கனகபுரா தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கனகபுராவில் டி.கே.சுரேஷ் தாக்கல் செய்த வேட்பு மனுவை திரும்ப பெற முடிவு செய்துள்ளார்.
588 பேரின் மனுக்கள் நிராகரிப்பு
ஒட்டு மொத்தமாக 4,989 மனுக்களில், முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 588 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 24-ந் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. அன்றைய தினம் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள் என்பது உறுதியாகி விடும். அதன்பிறகு, கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க உள்ளது.