கர்நாடக காங்கிரஸ் நம்பிக்கை இழந்து உள்ளது; நளின்குமார் கட்டீல் எம்.பி. பேட்டி

கர்நாடக காங்கிரஸ் நம்பிக்கை இழந்து உள்ளதாக நளின்குமார் கட்டீல் எம்.பி. தெரிவித்துள்ளார்

Update: 2022-06-02 15:06 GMT

மங்களூரு;

நளின்குமார் கட்டீல் எம்.பி.

கர்நாடக பாடநூலில் சில தலைவர்கள், கவிஞர்களின் முக்கிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாடநூல் விவகாரத்தை கண்டித்து துமகூரு மாவட்டம் திப்தூரில் உள்ள மந்திரி பி.சி.நாகேசின் வீட்டு முன்பு காங்கிரஸ், தேசிய மாணவ அமைப்பினர் நேற்றுமுன்தினம் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் அவர்கள் மந்திரி பி.சி.நாகேசின் வீட்டிற்குள் நுழைய முயன்றதாக தெரிகிறது. இதில் தொடர்புடைய 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கர்நாடக பா.ஜனதா மாநில தலைவரும், எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கண்டிக்கத்தக்கது

பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி. நாகேசின் வீட்டு முன்பு காங்கிரஸ், தேசிய மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் காங்கிரஸ் நம்பிக்கை இழந்து உள்ளது. இதனால் கலவரம், போராட்டம் நடத்த மக்களை தூண்டி வருகிறது. பெங்களூருவில் அகண்ட சீனிவாச மூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு காங்கிரஸ் கட்சிக்காரர்களே தீவைத்தனர். நாட்டில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்த உரிமை உண்டு.

ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக போராட்டம் நடத்துவது தவறு. இதில் 18 பேரை கைது செய்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காதபடி பார்த்துகொண்ட போலீசாருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்