கர்நாடக முதல்-மந்திரியை காங்கிரஸ் தேசிய தலைமை முடிவு செய்யும் - எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்

கர்நாடக முதல்-மந்திரியை அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு செய்யும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2023-05-14 15:43 GMT

Image Courtesy : ANI

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ந்தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி 137 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது.

36 ஆண்டுகளுக்கு பின்னர் 137 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதில், கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த. வேட்பாளர் நாகராஜூவை 1,22,392 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, காங்கிரஸ் கட்சியின் பிரதேச கமிட்டி தலைவரான டி.கே. சிவக்குமார் வெற்றி பெற்று உள்ளார்.

இதேபோன்று, வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் வி.சோமண்ணாவை 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று உள்ளார்.

இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது. முதல்-மந்திரி பதவியை கட்சி வழங்கினால் ஏற்று கொள்வேன் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றறது. இந்த கூட்டத்தில் 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்-மந்திரியை அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு செய்யும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்