கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்- தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

ரமேஷ் ஜார்கிகோளி ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக கூறிய விவகாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தகுதி நீக்கம் செய்ய கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது.;

Update: 2023-01-30 14:11 GMT

பெஙகளூரு,

கர்நாடக பா.ஜனதா கட்சியை சோ்ந்த முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. பெலகாவியில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க தயாராக இருப்பதாக கூறினார். இதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி செலவழிக்க பா.ஜனதா சதி செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இந்த நிலையில் காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் நேற்று பெங்களூருவில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனாவை நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது ரமேஷ் ஜார்கிகோளி, ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக பேசி இருப்பதாகவும், இது சட்டவிரோதம் என்றும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ரமேஷ் ஜார்கிகோளியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனறும் கோரி புகார் கடிதம் கொடுத்தனர். இதை பெற்றுக்கொண்ட அவர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அந்த கடிதத்தில், "கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவை சோ்ந்த முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக கூறியுள்ளார். அவ்வாறு பார்த்தால் மாநிலத்தில் 5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்ய பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோரின் எம்.எல்.ஏ. பதவியையும், ஜே.பி.நட்டா, நளின்குமார் கட்டீல் ஆகியோரின் எம்.பி. பதவியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களிடம் விசாரணை நடத்தும்படி வருமான வரி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்