கர்நாடக சட்டசபை கூட்டுக்கூட்டம் இன்று தொடங்குகிறது

காங்கிரசின் முதல் கூட்டத்தொடரான கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதல் நாளில் கவர்னர் தாவர் சந்த் கெலாட் உரையாற்றுகிறார்.;

Update:2023-07-03 02:32 IST

பெங்களூரு:-

சட்டசபை கூட்டுக்கூட்டம்

கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஆட்சி அமைந்த பிறகு எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்புக்காக மூன்று நாட்கள் சட்டசபை கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த முதல் கூட்டத்தொடர் என்பதால் சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

கவர்னரின் உரையில் அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவரங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னர் உரை நிறைவடைந்ததும், சட்டசபை நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்படும்.

இதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறும். மூன்று நாட்கள் விவாதத்திற்கு பிறகு அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

சபை நடவடிக்கைகள் முடங்கும்

அதைத்தொடர்ந்து 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் வருகிற 7-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். ஏற்கனவே 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள அவர் தற்போது 14-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வார்.

இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் அரசின் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்த கோரியும், உத்தரவாத திட்டங்களுக்கு நிபந்தனைகள் விதித்ததற்கு எதிராகவும் பா.ஜனதா பிரச்சினைகளை கிளப்ப திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நாளை சட்டசபையில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதமாற்ற தடை சட்டம் ரத்து மசோதா

10 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டம் வாபஸ், பசுவதை தடை சட்டம் வாபஸ், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு விதான சவுதாவை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விதானசவுதா சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்