கர்நாடக சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்த பா.ஜனதா திட்டம்?

குஜராத், இமாசல பிரதேச மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்தால், கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-12-03 21:12 GMT

பெங்களூரு:-

அனுமதி வழங்கவில்லை

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு நடைபெற்று வருகிறது. மந்திரிசபையில் 4 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும், மந்திரிசபையை மாற்றியமைக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் மட்டும் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது. இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லிக்கு சென்றிருந்தார். பா.ஜனதா மேலிட தலைவர்கள், மூத்த மத்திய மந்திரிகளையும் அவர் சந்தித்து பேசி இருந்தார். அப்போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அவர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

முன்கூட்டியே தேர்தல்?

ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏமாற்றம் அடைந்தார். அதே நேரத்தில் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பதில் சட்டசபை தேர்தலை முன்கூட்டியே சந்திப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் பா.ஜனதா தலைவர்கள் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இமாசலபிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிந்துள்ளது. இதுபோல், குஜராத் மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

இந்த 2 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வருகிற 8-ந் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு சாதகமாக வந்தால், கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் தேவையில்லை என்று தலைவர்கள் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மந்திரிசபை விரிவாக்கம் இல்லை

இதற்கு முன்பு பெங்களூருவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி கூட மந்திரிசபை விரிவாக்கத்தில் ஆர்வம் செலுத்த வேண்டாம், ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் பெலகாவியில் இந்த மாதம் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

அதன்பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடரும் நடைபெற உள்ளது. இதுபோல், தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெற இருப்பதுடன், சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறலாம் என்பதால், மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டாம் என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்