கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 200 பேர் விருப்ப மனு தாக்கல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 200 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.;

Update: 2022-11-13 21:16 GMT

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 200 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

750 பேர் மனு பெற்றனர்

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், கட்சி சார்பில் வழங்கப்படும் மனுக்களை பெற்று எந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் மனுக்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, தேர்தலில் போட்டியிட விரும்பி 750 பேர் மனுக்களை பெற்றிருந்தனர். அவர்களில் 200 பேர் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்து காங்கிரஸ் அலுவலகத்தில் கொடுத்திருந்தார்கள்.

பாதாமியில் 7 பேர் விருப்பம்

ஆனால் இன்னும் 550 பேர் மனுக்களை கொடுக்கவில்லை. அதே நேரத்தில் சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட தாங்கள் எந்த தொகுதியில் போட்டியிட போகிறோம் என்பது குறித்து தெரிவிக்க மனுக்களை வாங்காமல் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது. 91 வயதான சாமனூர் சிவசங்கரப்பா தாவணகெரே தெற்கு தொகுதியில் போட்டியிட மனு பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் முன்னாள் மந்திரி மகாதேவாவின் மகள் 27 வயதான ஐஸ்வர்யாவும் மனு பெற்றிருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த முறை போட்டியிட்ட பாதாமி தொகுதியில் போட்டியிட 7 பேர் விருப்பம் தெரிவித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கோலார் தொகுதியில் போட்டியிட 8 பேர் விருப்ப மனுவை கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

தேதியை நீட்டிக்க முடிவு

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி தினமாகும். ஆனால் மனுக்களை பெற்ற பலர் இன்னும் மனுக்களை தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக மனுக்களை பெறுவது மற்றும் தாக்கல் செய்யும் தேதியை இன்னும் ஒரு வாரம் நீட்டிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதியில் போட்டியிட நடிகை பாவனாவும் விருப்பம் தெரிவித்து மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்