கார்கே 125 வயது வரை வாழ வேண்டும்... ராஜ்நாத் சிங் கூறியது ஏன்?
அரியானாவில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், கலியுகத்தில் அதிகபட்ச வயது 125 ஆண்டுகள் என கார்கேவுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.;
சண்டிகார்,
அரியானாவின் சார்கி தாத்ரி பகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நான் மதிக்கிறேன்.
ஆனால் அவர் நேற்று நடந்த பொது கூட்டம் ஒன்றில், உடல்நலம் பாதித்து சரிந்ததும், பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு உதவினர். அப்போது அவர் கூறும்போது, மோடியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் வரை உயிருடன் இருப்பேன் என கூறினார். கலியுகத்தில் அதிகபட்ச வயது 125 ஆண்டுகள் என அவருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கார்கே 125 வயது வரை வாழ வேண்டும் என நான் கடவுளை வேண்டி கொள்கிறேன். பிரதமர் மோடியும் 125 ஆண்டுகள் வரை தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்து அவரை பிடித்து கொண்டனர். பின்பு அவரை இருக்கையில் அமர செய்தனர்.
அப்போது, அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன். மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை நான் உயிரோடு இருப்பேன். நான் உங்களுக்காக போராடுவேன் என்று ஆவேசத்துடன் பேசினார்.