கன்னட நடிகர் லட்சுமண் மாரடைப்பால் சாவு; திரை உலகினர் இரங்கல்
கன்னட நடிகர் லட்சுமண் மாரடைப்பால் உயிரிழந்தார்.;
பெங்களூரு:
கன்னட திரைஉலகின் பிரபல நடிகர் லட்சுமண் (வயது 74). இவர் டாக்டர் ராஜ்குமார், அம்பரீஷ் மற்றும் ரஜினிகாந்த் உள்பட பலருடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இவர், பெங்களூரு மூடலபாளையா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக அவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் லட்சுமணை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் லட்சுமண் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர். அவரது இறப்புக்கு கன்னட திரைஉலகினர், அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். லட்சுமண் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.