மேற்குவங்காள ரெயில் விபத்துக்கான காரணம் என்ன? - வெளியான அதிர்ச்சி தகவல்
மேற்குவங்காளத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் மீது அதிவேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.
கொல்கத்தா,
திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவுக்கும் மேற்குவங்காளத்தின் சில்டா நகர் இடையே கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் திரிபுராவில் இருந்து அசாம், பீகார், ஜார்க்கண்ட் வழியாக மேற்குவங்காளத்தை அடைகிறது.
இதனிடையே, அகர்தலாவில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் சில்டா நகர் நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் இன்று காலை மேற்குவங்காளத்தின் ராணிபத்ரா - சட்டர் ஹட் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் இருந்து மோதியது.
இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பார்சல் பெட்டிகள், 1 பயணிகள் பெட்டி தடம்புரண்டன. மேலும், இந்த விபத்தில் சரக்கு ரெயில் டிரைவர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், எக்ஸ்பிரஸ் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்த முழு விவரம்:-
அகர்தலாவில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் சில்டா நகர் நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் இன்று காலை மேற்குவங்காளத்திற்குள் வந்துள்ளது. மேற்குவங்காளத்தின் ரங்கபணி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 8.27 மணிக்கு கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் சில்டா நகர் நோக்கி புறப்பட்டுள்ளது.
ரங்கபணி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் ராணிபத்ரா - சட்டர் ஹட் ரெயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டது. இந்த ரெயில் நிலையங்களுக்கு இடையேயான தானியங்கு சிக்னல் தொழில்நுட்பம் தோல்வியடைந்துள்ளது. இன்று காலை 5.50 மணிமுதல் இந்த இரு ரெயில் நிலையங்களுக்கும் இடையேயான சிக்னல் தொழில்நுட்பம் தோல்வியடைந்துள்ளது.
சிக்னல் தொழில்நுட்பம் தோல்வியடைந்து சிகப்பு விளக்கு எரிந்துள்ளது. இதையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில் இரு ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. ராணிபத்ரா - சட்டர் ஹட் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான சிக்னல் கோளாறு குறித்து ராணிபத்ரா ரெயில் நிலைய ஊழியர்களுக்கு முன்பாகவே தெரிந்துள்ளது.
சிக்னல் தொழில்நுட்பம் தோல்வியடைந்தால் குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் உள்ள ஊழியர் எழுத்துப்பூர்வமாக உத்தரவாத கடிதம் அளிக்க வேண்டும். அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தாலும் ரெயில் டிரைவர் ரெயிலை தொடர்ந்து இயக்கலாம்.
அதாவது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சிகப்பு விளக்கு எரியும் சிக்னலில் ரெயில் ஒரு நிமிடம் நிறுத்தப்பட வேண்டும். பின்னர், ஒரு நிமிடம் கழித்து ரெயில் 10 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட வேண்டும். இந்த உத்தரவாத கடிதம் கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராணிபத்ரா - சட்டர் ஹட் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ரங்கபணி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 8.42 மணிக்கு சரக்கு ரெயில் புறப்பட்டுள்ளது. இந்த ரெயிலும் கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் பயணித்த அதே தண்டவாளத்தில் பயணித்துள்ளது. ராணிபத்ரா - சட்டர் ஹட் இடையே சிக்னல் கோளாறு உள்ளது குறித்தும் அந்த பகுதியில் சிக்னல் சிகப்பு விளக்கு எரிந்தாலும் ரெயில் செல்ல சரக்கு ரெயிலுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, ராணிபத்ரா - சட்டர் ஹட் இடையேயான பாதையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சிகப்பு விளக்கு எரியும் சிக்னலில் ரெயில் ஒரு நிமிடம் நிறுத்தப்பட வேண்டும். பின்னர், ஒரு நிமிடம் கழித்து ரெயில் 10 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட வேண்டும். எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வழங்கப்பட்ட அதே அனுமதி சரக்கு ரெயிலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் ரங்கபணி ரெயில் நிலையத்தில் இருந்து 8.27 மணிக்கு புறப்பட்டதையடுத்து அது அடுத்த ரெயில் நிலையத்திற்கு சென்றிருக்கும் என்ற அடிப்படையில் 8.42 மணிக்கு புறப்பட்ட சரக்கு ரெயிலுக்கும் சிகப்பு சிக்னலை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ராணிபத்ரா - சட்டர் ஹட் இடையேயான வழித்தடத்தில் சரக்கு ரெயிலை டிரைவர் இயக்கியுள்ளார். சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தபோதும், ரெயில்வே ஊழியர் அளித்த உத்தரவாத கடிதத்தின் அடிப்படையில் சரக்கு ரெயிலை டிரைவர் இயக்கியுள்ளார்.
அப்போது, ஏற்கனவே சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது சரக்கு ரெயில் பின்னால் வந்து வேகமாக மோதியுள்ளது. கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தாலும் 1 நிமிடம் நின்று பின்னர் புறப்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கஞ்சன் ஜங்கா ரெயில் புறப்பட்டு செல்லாமல் தண்டவாளத்திலேயே நின்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் ராணிபத்ரா - சட்டர் ஹட் இடையே நின்றுகொண்டிருந்த கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது பின்னால் இருந்து மோதியது. இதில், எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 சரக்கு பெட்டிகள், 1 பெட்டி என 3 பெட்டிகள் தடம் புரண்டன. எக்ஸ்பிரஸ் ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் சரக்கு பெட்டிகள் ஆகும். இந்த கோர விபத்தில் சரக்கு ரெயில் டிரைவர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். எக்ஸ்பிரஸ் ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் சரக்கு பெட்டிகள் என்பதால் குறைவான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 3ம் பயணிகள் பெட்டியாக இருந்தால் அதிக உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரக்கு ரெயில் டிரைவர் தனக்கு கிடைந்த அனுமதி கடிதத்தின் அடிப்படையில் சிகப்பு சிக்னலில் ரெயிலை முன்னோக்கி இயக்கியுள்ளார். ஆனால், எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்திலேயே சிக்னலுக்காக நின்றுள்ளது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது சரக்கு ரெயில் பின்னால் இருந்து மோதியதாக தெரியவந்துள்ளது. அதேவேளை, சிகப்பு சிக்னல் இருந்தபோதும் முன்னேறி செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோது எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லாததே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் முன்னேறி செல்லாததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.