இயற்கை ஆர்வலர் கல்மனே காமேகவுடா மரணம்

ஆடுகளை வளர்த்த வருமானத்தில் 16 ஏரிகளை நிர்மாணித்த இயற்கை ஆர்வலரான கல்மனே காமேகவுடா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

Update: 2022-10-17 21:53 GMT

மண்டியா:

ஆடுகளை வளர்த்த வருமானத்தில் 16 ஏரிகளை நிர்மாணித்த இயற்கை ஆர்வலரான கல்மனே காமேகவுடா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இயற்கை ஆர்வலர் கல்மனே காமேகவுடா

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா தாசனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கல்மனே காமேகவுடா. அவருக்கு வயது 84. இயற்கை ஆர்வலரான இவர், வெங்கட கவுடா-ராஜம்மா தம்பதியின் மகன் ஆவார். ஆடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த இவருக்கு இயற்கை பாதுகாப்பு மீது அதிக அக்கறை இருந்துள்ளது. இதனால் மலவள்ளி அருகே குண்டூர் மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சொந்த செலவில் தனது தீவிர முயற்சியால் 16 ஏரிகளையும், தடுப்பணைகளையும் நிர்மாணித்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்து வந்தார்.

மரணம்

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்மேன காமேகவுடா வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மருத்துவ செலவை அரசு ஏற்றது. இதையடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை தாசனதொட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் கல்மனே காமேகவுடா உடல் மோசமாகி மரணமடைந்தார். இதனை அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

இவரது மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி மற்றும் மந்திரிகள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இயற்கை ஆர்வலர் கல்மேன காமேகவுடாவின் உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தாசனதொட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் நேற்று மாலை அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த கல்மனே காமேகவுடாவுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்றவர்

பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி தனது மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர் கல்மேன காமேகவுடாவை 'நீர் வாரியர்' என்று பாராட்டினார். மேலும் இயற்கை ஆர்வலர் கல்மேன காமேகவுடாவின் சேவையை பாராட்டி கர்நாடக அரசின் உயரிய விருதான கன்னட ராஜ்யோத்சவா விருது வழங்கப்பட்டுள்ளது.

ஏரிகளை நிர்மாணித்த பின்னணி என்ன?

இயற்கை ஆர்வலர் கல்மனே காமேகவுடா ஏரிகளை நிர்மாணித்தன் பின்னணி குறித்த விவரம் பின்வருமாறு:-

ஆடு மேய்த்து வந்த இயற்கை ஆர்வலர் கல்மனே காமேகவுடா, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது கிராமத்தை ஒட்டியுள்ள குண்டூர் மலைப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு கடும் தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு மலைப்பகுதியில் தண்ணீர் கிடைக்கவில்லை. அதன்பின் சிறிது தூரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு நடந்து தண்ணீர் கேட்டு வாங்கி குடித்து தாகத்தை தணித்து கொண்டார். அப்போது அவர், மலை மற்றும் வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகள், பறவைகளின் தண்ணீர் தேவை குறித்து கவலைப்பட்டார். இதனால் குண்டூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரி உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். முதலில் மலையில் ஏரி உருவாக்க கல்மனே காமேகவுடா பள்ளம் தோண்டியபோது அப்பகுதி மக்கள் அவரை கேலி செய்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் கல்மனேகவுடா ஏரிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அதன்படி 16 ஏரிகளை உருவாக்கி, பிரதமர் மோடியால் பாராட்டு பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்