சமூக ஊடகங்களை கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா
சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார்.
நீதிபதி பார்த்திவாலா பேச்சு
நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்து, அவர் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இடம் பெற்றிருந்தவர் நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா ஆவார். இவர், டெல்லியில் டாக்டர் ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசா தேசிய சட்ட பல்கலைக்கழகம் ஏற்பாட்டில் நேற்று நடந்த நீதிபதி எச்.ஆர்.கன்னா நினைவு தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் சட்டம் மற்றும் அரசியல்சாசன பிரச்சினைகளை அரசியல் ஆக்குவதற்கு சமூக ஊடகங்களும், டிஜிட்டல் ஊடகங்களும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
தேவையற்ற தலையீடு
நீதி வழங்கல் அமைப்பில் டிஜிட்டல் மீடியாவின் விசாரணைகள், தேவையற்ற தலையீடு ஆகும். இந்த தளங்களில் பல நேரங்களில் லட்சுமண ரேகையை தனிப்பட்டவர்களுக்காக கடப்பது என்பது ஆபத்தானது. அரசியல் சாசனத்தின் கீழ், நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.தீர்ப்புகளுக்காக நமது நீதிபதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு சென்று விடும். இதனால் சட்டம் உண்மையில் என்ன உத்தரவிடுகிறது என்பதை காட்டிலும், சமூக ஊடகங்கள் என்ன நினைக்கின்றன என்பதை அறிவதில் நீதிபதிகள் பெரிய அளவில் கவனத்தை செலுத்த வேண்டியதாகி விடும்.
கோர்ட்டு தீர்ப்புகள்
நீதித்துறை தீர்ப்புகள், பொது கருத்தின் பிரதிபலிப்பாகி விட முடியாது. பொது உணர்வைக்காட்டிலும், சட்டத்தின் ஆட்சிதான் மேலோங்கி நிலை நிறுத்தப்பட வேண்டும். ஒரு புறம் பெரும்பாலான மக்களின் உணர்வை சமநிலைப்படுத்துவதும், அதன் கோரிக்கையை சந்திப்பதும், இன்னொரு புறம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதும் கடினமானதாகும்.
இவ்விரண்டுக்கும் இடையே, கயிற்றில் நடப்பதுபோல செயல்படுவதற்கு நீதித்துறைக்கு மிக தேர்ந்த கைவினைத்திறன் தேவைப்படுகிறது.
பாதிதான் உண்மை
சமூக ஊடகங்களும், டிஜிட்டல் ஊடகங்களும் பாதியளவு உண்மையையே கொண்டிருக்கின்றன. ஆனால் இவை நீதித்துறை செயல்முறையை ஆராயத்தொடங்கி விடுகின்றன.
சமூக ஊடகங்களும், டிஜிட்டல் ஊடகங்களும் இப்போது, தீர்ப்பின் மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை தெரிவிப்பதற்கு பதிலாக நீதிபதிகள் மீதான தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்த தொடங்கி விடுகின்றன. சமூக ஊடக விவாதங்களில் நீதிபதிகள் பங்கேற்க கூடாது. நீதிபதிகள் ஒருபோதும் தங்கள் நாவினால் பேசுவதில்லை. அவர்கள் தீர்ப்புகள் மட்டுமே பேசப்பட வேண்டும். நீதித்துறையானது சமூகத்தை சாராமல் இருக்க முடியாது. ஆனால் சட்டத்தின் ஆட்சி, கடக்க முடியாதது.
இவ்வாறு அவர் கூறினார்.