ராகுல்காந்திக்காக வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் காங்கிரஸ்; ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

நாட்டின் வளர்ச்சியில் பா.ஜனதா கவனம் செலுத்தினால், ராகுல்காந்திக்காக வாரிசு அரசியலை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.;

Update: 2023-03-18 21:13 GMT

பெங்களூரு:

நாட்டின் வளர்ச்சியில் பா.ஜனதா கவனம் செலுத்தினால், ராகுல்காந்திக்காக வாரிசு அரசியலை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், பிரசாரத்திற்காக பா.ஜனதா தலைவர்கள் அடிக்கடி கர்நாடகம் வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விஜய சங்கல்ப யாத்திரையில் பங்கேற்று வருகிறார். நேற்று முன்தினம் சித்ரதுர்காவில் நடைபெற்ற யாத்திரையில் அவர் பங்கேற்று இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு பெங்களூரு வந்த ஜே.பி.நட்டா, சட்டசபை தேர்தல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று காலையில் துமகூரு மாவட்டம் திப்தூருக்கு சென்ற அவர், விஜய சங்கல்ப யாத்திரையில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து, துமகூருவில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

வாரிசு அரசியலை ஊக்குவிக்க...

நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருந்தது. 2 ஜி, காமன் வெல்த் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். தற்போது நமது நாடு, உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. காங்கிரசின் ஊழல், கமிஷன் மற்றும் வாரிசு ஆட்சியால், நாட்டின் அரசியல் கலாசாரத்தையே மாற்றி இருந்தனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்பு, நாட்டின் வளர்ச்சி மற்றும் அனைத்து தரப்பினரின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தற்போதும் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதில் தீவிரம் காட்டுகிறது. இதற்கு காரணம் ராகுல்காந்தி. அவரை ஊக்கவிக்க வேண்டும் என்பதற்காக வாரிசு அரசியலை காங்கிரஸ் தொடர்கிறது. அந்த கட்சியினர் ராகுல்காந்தி பின்னால் இருக்கிறார்கள்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்

பா.ஜனதாவில் பிரதமர் மோடி, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களை சுயமாக வளர்த்து கொண்டவர்கள். தேர்தலில் வெற்றி பெற முடியாத ராகுல்காந்தி, வெளிநாட்டு மண்ணில், இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக குற்றச்சாட்டு கூறி இருக்கிறார்.

இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மந்திரி மாதுசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்