வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு ஜே.பி.நட்டா வாழ்த்து

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2024-08-08 21:17 GMT

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் நேற்று வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக இந்திய ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதோடு, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஞ்சாப்பைச் சேர்ந்த ஆக்கி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா, இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி வெண்கலம் வென்றுள்ளது. பா.ஜ.க. சார்பில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அணியின் அசாதாரணமான, அர்ப்பணிப்பு நிறைந்த விளையாட்டையும், செயல்திறனையும் கண்டு ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்