கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இடதுசாரி எம்.பி.க்கள் இன்று முதல் ஆய்வு
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இடதுசாரி எம்.பி.க்கள் இன்று முதல் ஆய்வு நடத்த உள்ளனர்.
புதுடெல்லி,
மணிப்பூரில் 2 மாதங்களுக்கு மேலாக நீண்டு வரும் கலவரம், 100-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி இருக்கிறது. ஏராளமானோர் காயம் அடைந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியும் இருக்கிறார்கள்.
மாநிலத்தில் வன்முறை பாதித்த பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு இன்று (வியாழக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை பார்வையிடுகிறது. இதில் 5 எம்.பி.க்கள் இடம்பெற்று உள்ளனர்.
இது தொடர்பாக இந்த கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மணிப்பூரின் துன்புறும் மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவும், கள நிலவரங்களை ஆய்வு செய்யவும் 5 எம்.பி.க்கள் கொண்ட குழுவை மணிப்பூருக்கு ஜூலை 6 முதல் 8-ந் தேதி வரை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுராசந்த்பூர் மற்றும் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து இன மக்களையும் இந்த குழு சந்திக்கும். 7-ந் தேதி கவர்னரை சந்திக்கும் இந்த குழு 8-ந் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.