குடியுரிமை சட்டங்களை கொண்டு வந்ததால் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட பயங்கரவாத அமைப்புடன் கைகோர்த்த பயங்கரவாதிகள்
குடியுரிமை சட்டங்களை கொண்டு வந்ததால் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதற்காக பெங்களூருவில் கைதான 2 பயங்கரவாதிகளும், பயங்கரவாத அமைப்புடன் கைகோர்த்தது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு: குடியுரிமை சட்டங்களை கொண்டு வந்ததால் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதற்காக பெங்களூருவில் கைதான 2 பயங்கரவாதிகளும், பயங்கரவாத அமைப்புடன் கைகோர்த்தது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பயங்கரவாதிகள் கைது
பெங்களூரு திலக்நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்நாட்டில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியான ஜுபான் என்ற அப்துல் அலியையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 2 பயங்கரவாதிகளையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
கைதான பயங்கரவாதிகள், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்து வந்ததும், அந்த பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்படுவதற்காக காஷ்மீர் சென்று, அங்கிருந்து ஆப்கானிஸ்தான் செல்வதற்கும் 2 பேரும் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், கைதான பயங்கரவாதிகளிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக...
அதாவது மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை சட்டமான என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ.வை கொண்டு வந்திருந்தது. இந்த குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்று இருந்தது. இந்த குடியுரிமை சட்டத்தால் வங்காளதேசம் மற்றும் பிற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி அக்தர் மற்றும் ஜுபானுக்கு தெரியவந்தது. ஏனெனில் அவர்கள் 2 பேரும் பல ஆண்டுகளுக்கு முன்பு வங்காளதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு வந்திருந்தனர்.பின்னர் இடைத்தரகர்கள் மூலமாக அசாம் மாநிலத்தில் தங்கி இருந்து ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அக்தர், ஜுபான் வாங்கி இருந்தார்கள். இந்த குடியுரிமை சட்டத்தால் தங்களுக்கும் பிரச்சினை ஏற்படும் என்று கருதியதால், இந்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிராக செயல்பட 2 பேரும் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதற்காக அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து, நாசவேலையில் ஈடுபட 2 பேரும் திட்டமிட்டு பற்றிய தகவல்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் கருத்து
இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் 2 பேரும் ஏராளமான கருத்துகளையும் பதிவிட்டு வந்திருந்தனர். தற்போது கூட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் 2 பேரும் கருத்துகளை பரிமாறி இருந்ததும் தெரியவந்துள்ளது. பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து பணியாற்றுவது தொடர்பாக அக்தரும், ஜுபானும் வங்காள மொழியிலேயே பேசி வந்துள்ளனர்.
இதைதொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காக ஆப்கானிஸ்தானுக்கு செல்வதற்கு திட்டமிட்டு இருந்தது பற்றிய தகவல்களும் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. இதற்கிடையே பயங்கரவாதிகள் கைதான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.