காதலியை கொன்று உயிரை மாய்த்த காதலன்.. துப்பு துலக்க போலீசாருக்கு உதவிய தற்கொலை குறிப்பு

தற்கொலை குறிப்பில் உள்ள குறியீட்டை வைத்து துப்பு துலக்கியதில், காணாமல் போன பெண், கார்கர் மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.;

Update: 2024-01-18 11:55 GMT

தானே:

மராட்டிய மாநிலம் நவி மும்பையில் காணாமல் போன 19 வயது பெண்ணின் உடல் 34 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நவி மும்பையின் கலம்பொலி பகுதியைச் சேர்ந்த அந்த பெண், கடந்த டிசம்பர் 12ம் தேதி கல்லூரிக்கு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக கலம்பொலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காணாமல் போன பெண்ணை தேடி வந்தனர். விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருந்தபோது, அதே டிசம்பர் 12ம் தேதி கலம்பொலியைச் சேர்ந்த வைபவ் புருங்கலே என்ற வாலிபர், ஜூயிநகர் ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தகவல் கிடைத்தது.

அந்த வாலிபரின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, தற்கொலை செய்வதற்கு முன்பாக பதிவு செய்த குறிப்பு இருந்தது. அதில், ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்யப்போவதாக கூறியிருந்தார். அந்த குறிப்பில் சில குறியீடுகளை அவர் பயன்படுத்தியிருந்தார். அதை வைத்து துப்பு துலக்கியதில், காணாமல் போன பெண், கார்கர் மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரால், அந்த பெண் கொல்லப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் காதலித்ததாகவும், இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்த நிலையில் காதலியை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

விசாரணை தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தற்கொலை செய்த வாலிபரின் செல்போனில் இருந்த தற்கொலைக் குறிப்பில் 'L01-501'போன்ற சில குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை ஆய்வு செய்ததில், அந்த குறியீடானது, வனத்துறையால் குறிக்கப்பட்ட ஒரு மரத்தின் எண் என்பது தெரியவந்தது. கார்கர் மலைப்பகுதியில் அந்த மரம் உள்ள பகுதியில் தேடியபோது பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்கொலைக் குறிப்பில் உள்ள குறியீடு பெண்ணின் உடலை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவியாக இருந்தது.

காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்று, புதரில் வீசியிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்