ஜார்க்கண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி? எம்.எல்.ஏக்களுடன் சத்தீஷ்கர் புறப்பட்டார் ஹேமந்த் சோரன்

பாஜக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சம் ஆளும் கட்சி மத்தியில் எழுந்துள்ளது.

Update: 2022-08-30 12:12 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த 2021-ம் ஆண்டு தனது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றார். அவர் தனது பதவியை பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில் ஹேமந்த் சோரன் சுரங்க ஒதுக்கீடு பெற்றது உறுதியானது. இதில் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகாரில் ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் கேட்டிருந்தார். ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய கவர்னருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் கவர்னர் இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை.

இதனால், பாஜக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சம் ஆளும் கட்சி மத்தியில் எழுந்துள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏக்களை பாதுகாக்க தொடங்கிய ஹேமந்த் சோரன் இன்று சத்தீஷ்கருக்கு சென்றுள்ளார். இரண்டு பேருந்துகளில் எம்.எல்.ஏக்களுடன் ராஞ்சி விமான நிலையம் சென்ற ஹேமந்த் சோரன், அங்கிருந்து ராய்பூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ராய்பூரில் உள்ள சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்ச கட்சி எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ராய்பூர் புறப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்