ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது

வங்கிக் கடன் மோசடி வழக்கில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2023-09-02 19:04 GMT

ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் (வயது 74), அவரது மனைவி அனிதா மற்றும் சில நிர்வாகிகள் கனரா வங்கியிடம் ரூ.538 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினர் நரேஷ் கோயலுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் நரேஷ் கோயலை டெல்லியில் இருந்து மும்பை ஒர்லி பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

நரேஷ் கோயலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு இரவில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மும்பை சிறப்பு கோர்ட்டில் நரேஷ் கோயலை ஆஜர்படுத்தினர். அவர் தொழிலுக்காக கனரா வங்கியில் வாங்கிய கடனை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாகவும், குறிப்பாக ரூ.9.46 கோடியை தனிநபர் கடனை செலுத்த பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை கோர்ட்டில் தெரிவித்தது.

மேலும் அவரிடம் விசாரணையை தொடர வேண்டியதிருப்பதால், தங்களது காவலில் ஒப்படைக்கும்படி கோரியது. இதனை ஏற்று நரேஷ் கோயலை வருகிற 11-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்த நிலையில் அதன் சேவையை கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்