ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது

சட்டசபை தேர்தல் தோல்வி பற்றி விவாதிக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

Update: 2023-05-24 18:45 GMT

பெங்களூரு:

சட்டசபை தேர்தல் தோல்வி பற்றி விவாதிக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

19 இடங்களில் வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி ராமநகர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார்.

ஏற்கனவே மண்டியா நாடாளுமன்ற தேர்தலிலும் நிகில் குமாரசாமி, நடிகை சுமலதா அம்பரீஷிடம் தோல்வியை சந்தித்து இருந்தார். இதனால் அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, தந்தை குமாரசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று கூட்டம்

இந்த நிலையில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தலைமை தாங்குகிறார். இதில் மூத்த தலைவர்கள் சி.எம்.இப்ராகிம், குமாரசாமி, எச்.டி.ரேவண்ணா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் புதியதாக தேர்வான எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. அத்துடன் சட்டசபைக்குள்ளேயும், வெளியேயும் மக்கள் பிரச்சினைகளை முன்எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது.

நிகில் குமாரசாமி விலகல்?

அத்துடன் கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து நிகில் குமாரசாமி விலக முடிவு செய்திருப்பதாகவும், இதுபற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, புதிய இளைஞர் அணி தலைவரை தேர்வு செய்ய தீர்மானித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் தோல்வியை தழுவியதால் நிகில் குமாரசாமி அரசியலில் இருந்து ஒதுங்கி, மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுபோல் மாநில தலைவர் பதவியை சி.எம்.இ்ப்ராகிம் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்து இருப்பது பற்றியும் இதில் விவாதிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்