எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்: சிறையில் இருந்து இன்று விடுதலை ஆகிறார்

எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.;

Update: 2024-05-13 22:19 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா (வயது 66). முன்னாள் மந்திரியான இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா (33). இவர் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஆவார். இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பெண்ணை கடத்தியதாக கடந்த 4-ந்தேதி பெங்களூருவில் வைத்து எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார். கடந்த 8-ந்தேதி எச்.டி.ரேவண்ணா பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அதே நேரத்தில் பெண் கடத்தப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்க கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் எச்.டி. ரேவண்ணா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் கடத்தப்பட்ட வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு எதிராக போதிய சாட்சி, ஆதாரங்கள் இல்லாததால், அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி சந்தோஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன் கிடைத்தாலும், ஜாமீன் மனு ஆவணங்கள் சிறைத்துறையிடம் மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும். ஆனால் ஜாமீன் இரவு 7 மணிக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.

எனவே எச்.டி.ரேவண்ணா நேற்றே சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. ஜாமீன் உத்தரவு நகலை வக்கீல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் வழங்குவார்கள் என்றும், அதன் பிறகே இ்ன்று மதியத்திற்குள் சிறையில் இருந்து எச்.டி.ரேவண்ணா விடுதலை ஆவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்