காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் மனைவியின் அரசு பணி ரத்து
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டாரின் மனைவியின் அரசு பணி ரத்து செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு:
பிரவீன் நெட்டார்
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார் (வயது 36). பா.ஜனதா பிரமுகரான இவர், கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 26-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 10 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அப்போது இருந்த பா.ஜனதா அரசு பிரவீன் நெட்டாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கும் என்று உறுதி அளித்தது. இதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி பிரவீன் நெட்டாரின் மனைவி நூதனகுமாரிக்கு ஒப்பந்த அடிப்படையில் குரூப்-சி பதவி வழங்கினார்.
பணி நீக்கம்
ஆனால் அவர் மங்களூருவில் பணியாற்ற விருப்பம் தெரிவித்ததால், நூதனகுமாரி மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இயற்கை பேரிடர் பிரிவில் பணி நியமனம் செய்யப்பட்டார். அங்கு அவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பிரவீன் நெட்டாரின் மனைவி நூதனகுமாரியின் அரசு பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.