ஜனதா தளம்(எஸ்) கட்சியை வலுப்படுத்தும் பணியை தொடங்கிவிட்டேன்- ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. பேட்டி
ஜனதா தளம்(எஸ்) கட்சியை வலுப்படுத்தும் பணியை தொடங்கிவிட்டேன் என்று ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
மைசூரு: முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை வலுப்படுத்தும் பணியை தொடங்கிவிட்டேன் என்றும் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
எச்.டி.தேவேகவுடா சந்திப்பு
மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா. இவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இதற்கிடையே ஜி.டி.ேதவேகவுடா கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்தசூழ்நிலையில் மைசூருவில் நடந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் பிரதமரும், கட்சியின் தேசிய தலைவருமான எச்.டி.தேவேகவுடா கலந்துகொண்டார். முன்னதாக அவர், குமாரசாமியுடன் ஜி.டி.தேவேகவுடாவின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ஜி.டி.ேதவேகவுடா ஆனந்த கண்ணீர் விட்டு விழுதார். அப்போது அவரை, எச்.டி.தேவேகவுடா கட்சியை விட்டு விலக வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
கட்சியை வலுப்படுத்தும் பணி...
இந்த நிலையில் நேற்று காலை எச்.டி.ேதவேகவுடாவுடன், ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவிலுக்கு வெளியே வந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் தேவேகவுடா, என்னை சந்தித்து பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் 3 ஆண்டுகளாக தவித்த எனது மனது சமாதானம் அடைந்துள்ளது.மேலும் நான் நேற்றில்(நேற்றுமுன்தினம்) இருந்து ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எனது செயல்பாடுகளை தொடங்கிவிட்டேன். எச்.டி.தேவேகவுடாவின் ஆர்வம், உற்சாகம் எனக்கு உத்வேகத்தை தந்துள்ளது. அவரது வழிகாட்டுதலில் கட்சியை வலுப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளேன். வரும் சட்டசபை தேர்தலில் கட்சி சார்பில் நான் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுவேன். உன்சூர் தொகுதியில் எனது மகன் ஹரிஷ் கவுடாவும், பிரியபட்டணாவில் கே.மகாதேவ், கே.ஆர்.நகரில் சா.ரா. மகேஷ், டி.நரசிப்புராவில் அஸ்வின் குமார், எச்.டி.கோட்டை தொகுதியில் சிக்கண்ணா அவரது மகன் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.