ஜனதாதளம் (எஸ்) கட்சியின் பஞ்சரத்னா யாத்திரை முல்பாகலில் இன்று தொடக்கம்

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் பஞ்சரத்னா யாத்திரை முல்பாகலில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படுவதாக குமாரசாமி கூறினார்.

Update: 2022-11-17 16:28 GMT

பெங்களூரு:-

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பஞ்சரத்னா யாத்திரை

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம். ஜனதா தளம் (எஸ்) கட்சியின் சார்பில் பஞ்சரத்னா ரத யாத்திரையை கடந்த 1-ந் தேதி முல்பாகல் குருடுமேலே கணபதி கோவில் பூஜை செய்து தொடங்கினோம். ஆனால் தொடர் மழை காரணமாக யாத்திரையை தற்காலிகமாக ஒத்திவைத்தோம். இந்த நிலையில் பஞ்சரத்னா யாத்திரையை இன்று (வெள்ளிக்கிழமை) முல்பாகலில் தொடங்குகிறேன்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா யாத்திரையை பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இன்று பகல் 2 மணியளவில் முல்பாகலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. வருகிற சட்டசபை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெற நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். சொந்த பலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

முழுமையான வளர்ச்சி

புதிய கர்நாடகத்தை உருவாக்குவதற்காக இந்த யாத்திரையை நடத்துகிறோம். கர்நாடகத்தின் முழுமையான வளர்ச்சிக்காக நாங்கள் பஞ்சரத்ன திட்டங்களை வகுத்துள்ளோம். கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்டவற்றில் அதிகளவில் முதலீடு செய்ய இருக்கிறோம். சமத்துவத்தை நிலைநாட்ட நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஒவ்வொரு நாளும் இந்த யாத்திரையின் முடிவில் கிராமங்களில் தங்கி மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டு அறிவேன்.

முல்பாகலில் தொடங்கும் இந்த யாத்திரை பங்காருபேட்டை, மாலூர், கோலார், சீனிவாசபுரா ஆகிய தொகுதிகளில் பயணிக்கும். அதன் பிறகு சிக்பள்ளாப்பூருக்கு யாத்திரை செல்லும். அங்கு சிந்தாமணி, சிட்லகட்டா, பாகேப்பள்ளி, கவுரிபிதனூர், சிக்பள்ளாப்பூர் ஆகிய தொகுதிகளில் யாத்திரை நடைபெறும். அதைத்தொடர்ந்து பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் யாத்திரை நடைபெறும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்