கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) அழிவின் விளிம்பில் உள்ள கட்சி; தேஜஸ்வி சூர்யா எம்.பி. விமர்சனம்
கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) அழிவின் விளிம்பில் உள்ள கட்சி என்று தேஜஸ்வி சூர்யா எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.;
பெங்களூரு:
பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யும், பா.ஜனதா தேசிய இளைஞர் அணியின் தலைவருமான தேஜஸ்வி சூர்யா குஜராத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, உள்துறை மந்திரி அமித்ஷாவை மோசமாக விமா்சனம் செய்துள்ளார். அவரது இந்த கருத்து அரசியல் ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அமித்ஷா குறித்து குமாரசாமி பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) அழிவின் விளிம்பில் உள்ள கட்சி.
வருகிற சட்டசபை தேர்தலுக்கு பிறகு அந்த கட்சி தனது அடையாளத்தை இழந்துவிடும். அதனால் தான் அவர் இவ்வாறு கருத்துகளை கூறி வருகிறார். கடந்த 10 நாட்களாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கூறும் கருத்துகளை பார்க்கும்போது, வருகிற சட்டசபை தேர்தலில் முடிவு எப்படி இருக்கும் என்பதை காட்டுவதாக உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும்.
இவ்வாறு தேஜஸ்வி சூர்யா கூறினார்.