எந்த நிபந்தனையும் இன்றி மீண்டும் பா.ஜ.க.வில் ஐக்கியமானார் ஜனார்த்தன ரெட்டி

ஜனார்த்தன ரெட்டியின் வருகை நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்று எடியூரப்பா கூறினார்.;

Update: 2024-03-25 10:12 GMT

பெங்களூரு:

கர்நாடகாவில் சுரங்க தொழிலதிபரும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வுமான ஜி.ஜனார்த்தன ரெட்டி தன் மனைவி அருணா லட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். அவரது கட்சியையும் பா.ஜ.க.வுடன் இணைத்தார். பெங்களூருவில் பா.ஜ.க. தலைவர்கள் பி.எஸ்.எடியூரப்பா, விஜயேந்திர எடியூரப்பா ஆகியோரின் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜனார்த்தன ரெட்டி, "இன்று எனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்து, பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதற்காக மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கட்சியில் இணைந்தேன். எனக்கு எந்த பதவியும் தேவையில்லை" என்றார்.

கட்சியில் இணைந்த ஜனார்த்தன ரெட்டியை எடியூரப்பா வரவேற்று வாழ்த்தினார். அவரது வருகை நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்றும் கூறினார்.

இதற்கு முன்பு பல ஆண்டுகள் பா.ஜ.க.வில் இருந்த ஜனார்த்தன ரெட்டி, 2008-ல் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியேற்றபோது அவரது மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தார். கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டபின் பா.ஜ.க.வுடனான தொடர்பில் இருந்து விலகினார். 2022-ம் ஆண்டு கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது மீண்டும் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி உள்ளார்.

கர்நாடகாவில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்