காஷ்மீரில் கட்டப்பட்டு வந்த புதிய சுரங்கப்பாதை இடிந்து விழுந்து ஒருவர் சாவு; 9 தொழிலாளர்களின் கதி என்ன?

காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். அதில் சிக்கியுள்ள 9 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2022-05-20 19:17 GMT

இடிந்து விழுந்தது

காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை, முக்கிய சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்துக்கு உட்பட்ட கூனி நல்லா பகுதிக்கு அருகே புதிதாக சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வரும் இந்த பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு-பகலாக பணியாற்றி வருகின்றனர். இதில் ராட்சத எந்திரங்கள் மற்றும் லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு சுமார் 10.15 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கே பணியில் இருந்த 13 தொழிலாளர்கள் சுரங்கப்பாதை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

3 தொழிலாளர்கள் மீட்பு

உடனே சக தொழிலாளர்கள் அதில் 3 பேரை மீட்டனர். படுகாயமடைந்த அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

அதேநேரம், இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது.

மீதமுள்ள 9 தொழிலாளர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே தொடங்கிய இந்த பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடந்து வருகிறது.

பாறை உடைக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட நவீன எந்திரங்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

சுரங்கப்பாதை இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என மீட்புக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெருத்த சோகம் நிலவி வருகிறது.

நேபாளத்தை சேர்ந்தவர்கள்

விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக அசாம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் நேபாளத்தை சேர்ந்த 2 பேரும் இதில் அடங்குவர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட துணை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மீட்பு பணிகள் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வரும் அவர், தொழிலாளர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளார்.

சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 9 தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் விவகாரம் காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்