பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் பலி: ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை நேரில் ஆய்வு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 வீரர்கள் பலியான நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அங்கு விரைந்தார். பாதுகாப்பு நிலைமையை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
பயங்கரவாதிகள் ஆதிக்கம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆதிக்கமும், எல்லை தாண்டிய பயங்கரவாதமும் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக எல்லையோர மாவட்டங்களான ரஜவுரி, பூஞ்ச் மாவட்டங்களில் கடந்த 2021 அக்டோபர் முதல் நடந்த 8 பயங்கரவாத தாக்குதல்களில் 26 ராணுவ வீரர்கள் உள்பட 35 பேர் கொல்லப்பட்டிருப்பது, அதற்கு சான்றாக அமைகிறது.
5 வீரர்கள் பலி
கடந்த மாதம் 20-ந்தேதி, பிம்பர்காலி-பூஞ்ச் இடையே ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரவாதிகள் மிருகவெறி கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து காஷ்மீரில் 'ஆபரேஷன் திரிநேத்ரா' என்ற பெயரில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த பாதுகாப்பு படையினர் முடிவு எடுத்தனர். எல்லைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம், பதுங்கல் பற்றி உளவுத்தகவல்கள் திரட்டப்பட்டு, அதன் பேரில் தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
வெடிகுண்டு தாக்குதல்
அந்த வகையில், நேற்று முன்தினம் ரஜவுரி மாவட்டத்தின் கண்டி கேஸ்ரி மலைப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த உளவுத்தகவல் பேரில் ராணுவம் அங்கு முற்றுகையிட்டது. பயங்கரவாதிகளைத் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கும் முயற்சியின்போது, ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உதம்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுமாப்பிள்ளையும் பலி
இந்த ஆண்டில் நடந்த 3-வது மிகப்பெரிய தாக்குதல் இது ஆகும். இந்த தாக்குதலில் பலியான 5 பேரில் ஒருவர் புதுமாப்பிள்ளையான சித்தாந்த் சேத்ரி ஆவார். மேற்கு வங்காள மாநிலம், பீஜன்பாரி பகுதியைச் சேர்ந்த அவருக்கு 2 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றதும், அவரது அண்ணன் ஓம் பிரகாஷ் சேத்ரி சமீபத்தில் தான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் விரைந்தார், ராணுவ மந்திரி
5 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், காஷ்மீரில் கள நிலைமையை நேரில் ஆய்வு செய்ய விரும்பிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயுடன் அங்கு விரைந்தார். ஜம்மு சென்றடைந்த அவர்கள், அங்கிருந்து துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா, வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ரஜவுரிக்கு சென்றார்கள்.
பாதுகாப்பு நிலைமை ஆய்வு
அங்கு 'ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ்' பிரிவு தலைமையகத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ அதிகாரிகள் கண்டி வெடிகுண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி எடுத்துக்கூறினர். அதைத் தொடர்ந்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அங்கு உயர் மட்டக்கூட்டம் ஒன்றை நடத்தினார். காஷ்மீரின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம், குறிப்பாக எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச், ரஜவுரி மாவட்டங்களின் பாதுகாப்பு நிலவரத்தை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிற பாதுகாப்பு படையினருடனும் ராஜ்நாத் சிங் கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச்சண்டை
இதற்கிடையே 5 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ரஜவுரி மாவட்டத்தின் கண்டி கேஸ்ரி மலைப்பகுதியில் நேற்று காலை 7 மணி முதல் ராணுவமும், போலீசாரும், மத்திய ஆயுதப்படையினரும் கூட்டாக பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள், கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் என ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.