'ஜெய் ஸ்ரீராம்' என்பது பா.ஜனதாவின் சொத்து அல்ல: சித்தராமையா பேச்சு

காந்தி காட்டிய வழியில் காங்கிரஸ் நடைபோடுகிறது என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறினார்.

Update: 2024-01-30 20:20 GMT

பெங்களூரு,

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு காந்தியின் உருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தி பேசும்போது கூறியதாவது:-

மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்று எந்த மதமும் சொல்லவில்லை. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து அரவணைத்து செல்லவே காங்கிரஸ் விரும்புகிறது. அனைத்து மதங்களையும் காங்கிரஸ் மதிக்கிறது. காந்தி காட்டிய வழியில் காங்கிரஸ் நடைபோடுகிறது. அவரின் கொள்கைகளே நமக்கு வழிகாட்டி. மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதே நம்முன் உள்ள சவால்.

பா.ஜனதாவினர் ராமரை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். காந்தியை கொன்ற கோட்சேவை ஆதரிப்பவா்களை மக்கள் நம்ப மாட்டார்கள். அனைவரையும் சமமாக பார்க்கும் ராமரின் கொள்கைகளை பின்பற்றும் நான் கடந்த 22-ந் தேதி பெங்களூருவில் ராமர் கோவிலை திறந்து வைத்தேன். ஜெய் ஸ்ரீராம் என்பது பா.ஜனதாவின் சொத்து அல்ல. காந்தியே ஹே ராம் என்று சொன்னார்.

பா.ஜனதாவினர், அனைவரையும் அரவணைத்து செல்வதாக வாய் வழியாக மட்டுமே சொல்கிறார்கள். ஆனால் செயல்பாட்டில் அவ்வாறு நடந்து கொள்வது இல்லை. மதச்சார்பின்மையில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை. இதற்கு எதிராக பா.ஜனதாவினர் நடந்து கொள்கிறார்கள். 140 கோடி மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமெனில் யாரையும் வெறுக்கக்கூடாது.

தேசபக்தி பற்றி பா.ஜனதாவினர் காங்கிரசுக்கு பாடம் எடுக்க தேவை இல்லை. நாட்டின் வரலாறே பா.ஜனதாவினருக்கு தெரியவில்லை. அதற்கு அம்பேத்கர், யாருக்கு வரலாறு தெரியாதோ அவா்களால் வரலாற்றை உருவாக்க முடியாது என்று கூறினார். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து பா.ஜனதாவை விரட்டியடிப்பதே காந்திக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்