டெல்லி காற்று மாசு விவகாரம்.. பஞ்சாப் அரசுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளும்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-11-07 08:03 GMT

புதுடெல்லி:

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வாகன பெருக்கத்தால் ஏற்படும் புகை மட்டுமின்றி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில், அறுவடைக்கு பின் விவசாய கழிவுகள் (தாளடி) எரிக்கப்படும்போது ஏற்படும் புகையும் டெல்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 

இந்நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதன்ஷு துலியா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:-

டெல்லியில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் அளவுக்கு காற்றின் தரம் குறைந்துள்ளது. இது மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்க ஒரு காரணமாகும்.

ஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லியின் காற்று மாசுபாடு மிகப்பெரிய அளவுக்கு அதிகரிப்பதற்கு, அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் பயிர் கழிவுகளை எரிப்பது முக்கிய காரணம்.

பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் அதை எப்படி செய்வீர்களோ எங்களுக்கு தெரியாது, அது உங்கள் வேலை. ஆனால் நிறுத்தப்பட வேண்டும். உடனடியாக ஏதாவது செய்யுங்கள்.

பஞ்சாப் அரசு மட்டும் இதற்கு பொறுப்பல்ல, டெல்லி அரசும் பொறுப்பேற்க வேண்டும். பல பேருந்துகள் மாசுபடுத்தும் நிலையில் இயங்குகின்றன. எனவே, நீங்களும் (டெல்லி அரசு) இந்த பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்

பயிர் கழிவுகள் எரிப்பதை நிறுத்துவதற்கான வழிகள் குறித்து உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு மற்றொரு முக்கிய பங்களிப்பான வாகன புகையையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்