அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை-முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
அரசியலமைப்பு சாசன சட்டத்தை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
மைசூரு:-
வக்கீல்கள் சங்க மாநாடு
கர்நாடக பார் கவுன்சில் சார்பில் கர்நாடக வக்கீல்கள் சங்க மாநில மாநாடு மைசூருவில் நேற்று நடந்தது. மாநாட்டை முதல்-மந்திரி சித்தராமையா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா பேசுகையில், வக்கீல்கள் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு வக்கீல் தான். 14 ஆண்டுகளுக்கு பிறகு எனது சொந்த மாவட்டத்தில் வக்கீல் சங்க மாநில மாநாடு நடப்பது அளவற்ற மகிழ்ச்சி.
வக்கீல்கள் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. மாநில அரசால் நிறைவேற்ற கூடிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதில் நானும் உறுதியாக உள்ளேன். இது சம்பந்தமாக கடந்த பா.ஜனதா ஆட்சியில் பெலகாவியில் நடந்த கூட்டத்தொடரில் நான் கேள்வி எழுப்பினேன். ஆனால் அப்போதைய பா.ஜனதா அரசு வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றவில்லை.
பாதுகாப்பு சட்டம்
வருகிற சட்டசபை கூட்டத் தொடரில் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். கர்நாடகாவில் பார் கவுன்சில் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் இல்லை. இதற்கு இடம் கொடுக்க மாநில அரசு தயாராக உள்ளது. எங்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்பதை வக்கீல்கள் நீங்களே தேர்வு செய்யுங்கள். வக்கீல்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.
அரசியலமைப்பு சாசன சட்டத்தை காப்பாற்ற வேண்டியது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். மன்னர் ஆட்சி காலத்தில் அவர்கள் கூறுவது தான் சட்டமாக இருந்தது. அந்த சட்டம் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்காமல் போனது. ஆனால் தற்போது உள்ள சட்டம் அப்படி இல்லை. சட்டம் என்பது எல்லோருக்கும் சமம். எல்லோருக்கும் சமஉரிமை, அதுதான் அரசியலமைப்பு சாசன சட்டம். அதனை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.
கலந்து கொண்டவர்கள்
மக்கள், நீதிமன்றத்தின் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை மக்கள் இழந்து விடக்கூடாது. அந்த அளவிற்கு வக்கீல்கள் தங்களிடம் வரும் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை வாதாட வேண்டும். இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.
இந்த மாநாட்டில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, கர்நாடக மாநில ஐகோர்ட்டு நீதிபதி பிரசன்ன பி.மொராலே, இந்தியா பார் கவுன்சில் தலைவர் மதன்குமார் மிஸ்ரா, கர்நாடக மாநில பார் கவுன்சில் தலைவர் விசால ரகு, கர்நாடக சட்டத்துறை மந்திரி எச்.கே. பட்டீல், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.........