அமெரிக்க வங்கி திவால் எதிரொலி: இந்திய நிறுவனங்களுடன் மத்திய மந்திரி விரைவில் ஆலோசனை
அமெரிக்க வங்கி திவால் எதிரொலி: இந்திய நிறுவனங்களுடன் மத்திய மந்திரி விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார்.;
புதுடெல்லி,
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
அந்தவகையில் இந்திய நிறுவனங்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனவே இது தொடர்பாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் விரைவில் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'சிலிகான் வேலி வங்கி திவால் ஆனதால் உலகம் முழுவதும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. புதிய இந்திய பொருளாதாரத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முக்கியமானவை. எனவே இந்த திவால் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிவதற்காகவும், இதற்கு மோடி அரசு எவ்வாறு உதவ முடியும்? என்பதை அறிந்து கொள்ளவும் இந்த வாரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சந்திக்க உள்ளேன்' என குறிப்பிட்டு உள்ளார்.