மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியின் சாதி குறித்து குமாரசாமி பேசுவது தவறு

மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியின் சாதி குறித்து குமாரசாமி பேசுவது தவறு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-02-05 20:27 GMT

பெங்களூரு:-

சி.பி.ஐ. விசாரணை

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, தனது ஆபாச சி.டி.யை சதி செய்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டதாக புகார் கூறினார். அவர் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து, ஆபாச சி.டி. விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று டெல்லி சென்றார்.

பகல் 2 மணி அளவில் தனி விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து டெல்லி சென்றார். அவருடன் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல், நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் உள்ளிட்டோர் சென்றனர். அதேபோல் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவும் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசின் திட்டங்கள்

மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி மற்றும் அவர் சார்ந்த பிராமணர் வகுப்பு குறித்து குமாரசாமி விமர்சித்து பேசியுள்ளார். ஒருவருடைய சாதி பற்றி பேசுவது தவறு. தேர்தலில் மக்கள் சாதியை பார்த்து ஓட்டு போடுவது இல்லை. அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை மதிப்பிட்டு தான் வாக்களிக்கிறார்கள். அதுபற்றி குமாரசாமி பேச வேண்டும். அதை விடுத்து சாதி குறித்து பேசுவது ஏற்புடையது அல்ல.

நான் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்துள்ளேன். அதில் பங்கேற்றுவிட்டு பெங்களூரு திரும்புகிறேன். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை. ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச சி.டி. குறித்து என்னிடம் அவர் எந்த புகாரும் கொடுக்கவில்லை. ஒருவேளை அவர் புகார் கொடுத்தால் அதுபற்றி விசாரணை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்