இஸ்தான்புல்: இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; 200 பயணிகள் 12 மணிநேரம் பரிதவிப்பு

இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், தொழில்நுட்ப கோளாறால் விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது என்று கூறினார்.;

Update: 2024-07-25 09:21 GMT

புதுடெல்லி,

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்து சேர வேண்டிய இண்டிகோ விமான நிறுவனத்தின் 6இ 12 என்ற எண் கொண்ட விமானம் ஒன்றில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளானார்கள்.

ஏறக்குறைய 12 மணிநேரம் வரை விமான பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுபற்றி இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, தொழில்நுட்ப கோளாறால் விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது என்றும் இதுபற்றிய விவரம் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.

அவர்கள் காத்திருக்கும் காலத்தில் தேவையான உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டன. தேவையான பரிசோதனைகள் நடந்த பின்னர் அதே விமானம் சென்று சேரவேண்டிய இடத்திற்கு இயக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்காக இண்டிகோ விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்து கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.

எனினும் சேவை குறைபாடு உள்ளிட்ட விசயங்களை சுட்டி காட்டி பயணிகள் சிலர் பதிவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில், அசோக் பாக்ரியா என்ற பயணி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 200 பயணிகள் வரை புதுடெல்லிக்கு செல்ல வழியில்லாமல் 10 மணிநேரத்திற்கும் கூடுதலாக இஸ்தான்புல் விமான நிலையத்தில் பரிதவித்து வருகிறோம் என தெரிவித்து உள்ளார்.

பயணிகள் பலரும் விமான பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பாதுகாப்பு அதிகாரிகள் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதன்பின்னர், அதே விமானம் பரிசோதனைகளுக்கு பின்னர் பயணிகளுடன் இஸ்தான்புல்லில் இருந்து புறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்