வெள்ளி கிரகத்திற்கு விண்கலங்கள் அனுப்புவது குறித்து இஸ்ரோ ஆய்வு - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
வெள்ளி கிரகத்திற்கு விண்கலங்கள் அனுப்புவதற்கான முன் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, வெள்ளி(வீனஸ்) கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அதற்கான முன் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சூரிய குடும்பத்தில் அதிக வெப்பநிலை கொண்ட வெள்ளி கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழ் உள்ள கணிமங்கள் குறித்து ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 2024 டிசம்பரில் விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கடுத்த ஆண்டில் அடுத்த விண்கலத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.