ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு.. கேரள வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
இந்தியாவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்த அபூபக்கர் தூண்டியதாக என்.ஐ.ஏ. குற்றம்சாட்டியது.;
கொச்சி:
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளரான ஜஹ்ரான் ஹாசிம் மூளையாக செயல்பட்டார். இவரது பின்தொடர்பாளர் என கருதப்படும் ரியாஸ் அபூபக்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். இவர் கேரளாவின் பாலக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தது, பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்தது மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் அபூபக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருடன் அபூபக்கர் தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவில் தற்கொலை தாக்குதல் நடத்துவது தொடர்பாக கொச்சியில் கூட்டம் நடத்தி சதித்திட்டம் தீட்டியதாகவும் என்.ஐ.ஏ. குற்றம்சாட்டியது. மேலும், இந்தியாவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்த அபூபக்கர் தூண்டியதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், ரியாஸ் அபூபக்கர் (வயது 33) மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், அவரை குற்றவாளி என நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளி ரியாஸ் அபூபக்கருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1.25 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.