நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் வெளியீடு - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம்
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை மக்களவை செயலகம் இன்று வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி உட்பட மேலும் சில வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அரசாங்கம் ஊழலில் ஈடுபடும் போது, அதை பிறர் ஊழல் என்று கூறுவதை அவர்கள் விரும்புவதில்லை. 2 கோடி வேலை வாய்ப்புகள் , விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதற்கு மட்டும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ள டுவீட் ஒன்றில் , " பயன்படுத்த கூடாத வார்த்தைகளின் பட்டியலில் "சங்கி" என்ற வார்த்தை இல்லை . பாஜக எவ்வாறு இந்தியாவை அழிக்கிறது என்பதை விவரிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அரசு தடை செய்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.