விவசாயிகளின் பாதையில் முட்களை போடுவதா..? மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி

விவசாயிகளின் பாதையில் முட்களையும், ஆணிகளையும் இடுவது அமிர்தகாலமா அல்லது அநீதியின் காலமா என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-02-11 11:59 GMT

புதுடெல்லி,

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசை ஏற்க வலியுறுத்தி விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சார், கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்பட 200 விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

'டெல்லி நோக்கி பேரணி' என்ற பெயரில் நாளை மறுதினம் (13ம் தேதி) சுமார் 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக வர திட்டமிட்டுள்ளனர். 2,000 முதல் 2,500 டிராக்டர்களில் டெல்லி-நொய்டா எல்லையில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல், உத்தரபிரதேசம், சண்டிகர், பஞ்சாப்பில் இருந்தும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.இதையடுத்து, விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

டெல்லிக்கு அருகே உத்தரபிரதேசத்தின் டிக்ரி எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் உத்தேசித்துள்ள போராட்ட அணிவகுப்புக்கு முன்னதாக, டெல்லி எல்லைக்கு அருகே சில இடங்களில் சாலைகளில் தடுப்பு மற்றும் ஆணிகள் இடப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், விவசாயிகள் அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க சாலைகளில் ஆணிகள் போடப்பட்டு பல தடுப்புகள் போடப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், விவசாயிகளின் பாதையில் முட்களும் ஆணிகளும் இடுவது அமிர்த காலமா அல்லது அநீதியின் காலமா..?

இந்த உணர்ச்சியற்ற மற்றும் விவசாயிகளுக்கு எதிரான அணுகுமுறை 750 விவசாயிகளின் உயிரைப் பறித்தது. விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுவது, பிறகு குரல் எழுப்பக் கூட அனுமதிக்காதது - இது எப்படிப்பட்ட அரசாங்கத்தின் அறிகுறி..?

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை - MSP சட்டம் இயற்றப்படவில்லை, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவில்லை - பிறகு நாட்டின் அரசாங்கத்திற்கு விவசாயிகள் வரவில்லை என்றால், அவர்கள் எங்கே போவார்கள்..?

பிரதமரே..! நாட்டு விவசாயிகளிடம் ஏன் இத்தகைய நடத்தை..? விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை..?" என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்