திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றினார்: நடிகை ராக்கி சாவந்த் கணவர் மீது ஈரான் பெண் பாலியல் புகார்
திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றியதாக நடிகை ராக்கி சாவந்தின் கணவர் மீது ஈரான் பெண் மைசூரு போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார்.;
மைசூரு,
பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவரது கணவர் அதில் துரானி. இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் தான் திருமணமாகி இருந்தது.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ராக்கி சாவந்த், கணவர் அதில் துரானி தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும், வீட்டில் இருந்த ரொக்கப்பணம், தங்க நகைகளை திருடி சென்றுவிட்டதாகவும் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில், அவர் மீது மீண்டும் ராக்கி சாவந்த் பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார். அதாவது அதில் துரானி தனது நிர்வாண வீடியோக்களை சிலருக்கு விற்பனை செய்துவிட்டதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் ராக்கி சாவந்தின் கணவர் அதில் துரானி மீது மைசூரு வி.வி.புரம் போலீசில் ஈரான் நாட்டு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், நான் மைசூருவில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கி மருத்துவம் படித்து வருகிறேன். எனக்கும் அதில் துரானிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்துகொள்வதாக அவர் ஆசைவார்த்தை கூறி என்னுடன் உல்லாசம் அனுபவித்தார். அதன்பிறகு என்னுடன் பழகுவதை நிறுத்திய அவர், என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். திருமணம் செய்ய வலியுறுத்தினால், உல்லாசமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டுகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து போலீசார் அதில் துரானி மீது கற்பழிப்பு, மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.