ரோகிணி சிந்தூரி மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டு
19 கேள்விகளை முன்வைத்து ரோகிணி சிந்தூரி மீது ஐ.ஜி. அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:-
ரோகிணி சிந்தூரி
கர்நாடகத்தில் இந்து அறநிலையத்துறை கமிஷனராக இருந்து வருபவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி. இவர், மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த போது ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மந்திரியான சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. மீது அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த சா.ரா.மகேஷ், ரோகிணி சிந்தூரி மீது கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.
அதில், சா.ரா.மகேஷ் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதே நேரத்தில் மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த போது அரசு கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி ரோகிணி சிந்தூரி நீச்சல் குளம் கட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ரோகிணி சிந்தூரி விவகாரத்தை சா.ரா.மகேஷ் எழுப்பி இருந்தார். இந்த விவகாரங்கள் ரோகிணி சிந்தூரிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
எம்.எல்.ஏ.வுடன் சமாதான பேச்சு
இதையடுத்து, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவண்ணன் மூலமாக சா.ரா.மகேசை சந்தித்து ரோகிணி சிந்தூரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இதனை சா.ரா.மகேசும் உறுதி செய்திருந்தார். இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது ஐ.பி.எஸ். அதிகாரியான ரூபா, 19 குற்றச்சாட்டுகளை கூறி அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா உள்ளிட்டோருக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்ததாக அப்போது சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபா அம்பலப்படுத்தி இருந்தார். தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீதும் ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார். அவர் தனது முகநூலில் ரோகிணி சிந்தூரிக்கு எதிராக வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் வருமாறு:-
டி.கே.ரவி விவகாரம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலை வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில் அவருடன் பணியாற்றியவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. டி.கே.ரவி எல்லை தாண்டி இருந்தால், அதனை உடனடியாக தடுத்து இருக்க வேண்டும். அவரது செல்போன் எண் மற்றும் வாட்ஸ்-அப்பை அப்போதே 'பிளாக்' செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போது 'பிளாக்' செய்யாமல், தற்போது 'பிளாக்' செய்திருப்பதன் காரணம் என்ன?.
மண்டியா மாவட்ட கிராம பஞ்சாயத்து செயல்அதிகாரியாக இருந்த போது கூடுதலாக கழிவறை கட்டியதாக கூறி மத்திய அரசிடம் இருந்து விருது பெற்றிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அவர் மீது நேரடியாக குற்றச்சாட்டு வந்தாலும், தப்பித்து விட்டார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் தகராறு
கன்னட பெண்ணும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஷில்பா நாக்குடன் சண்டை நடந்தது ஏன்?. அதற்கு காரணம் என்ன?, நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷா குப்தாவுடன் சண்டை போட்டது ஏன்?, இதுபற்றி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். மற்றொரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவண்ணனுடன் அவர் (ரோகிணி சிந்தூரி) சண்டை போட்டு இருந்தார். இந்த விவகாரங்களில் விசாரணை நடைபெறவில்லை.
டி.கே.ரவி தற்கொலைக்கான காரணம் பற்றி அப்போது சிலர் கூறி நான் நம்பவில்லை. தற்போது அந்த காரணத்தை நம்புகிறேன். மைசூரு மாவட்ட பா.ஜனதா எம்.பி.யான பிரதாப் சிம்ஹா மீது கூறிய குற்றச்சாட்டையும் நிரூபிக்கவில்லை. இதுபோல், சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதில், ஒரு குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்காதது ஏன்?.
விசாரணைக்கு அனுமதி வழங்கவில்லை
பள்ளி பைகளை அதிக விலைக்கு விற்றதாக லோக் அயுக்தா போலீசில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் மீது விசாரணை கோரி லோக் அயுக்தா, அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் அவர் மீது விசாரணை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. சாதாரண அதிகாரிக்கு, இதுபோன்று அரசின் ஆதரவு இருக்குமா?.
இவரது கணவர் மற்றும் மாமா ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்கள். பல முறை அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள். இதற்கு தேவையான உதவிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து செய்து கொடுத்து வருகிறார். அவர்கள் நில முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கிறது. அதன்மீது விசாரணை நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து தான்பார்க்க வேண்டும்.
19 குற்றச்சாட்டுகள்
நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருப்பதால் பெங்களூருவில் இருந்து தூரமான யாதகிரியில் 3 ஆண்டுகள் பணியாற்றினேன். பின்னர் பணி இடமாற்றம் பெற்று பெங்களூருவுக்கு வந்தேன். இதனை எதிர்த்து என்னுடன் பணியாற்றிய அதிகாரி கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதுபோல், ரோகிணி சிந்தூரி தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதாடி இருந்தார். ரோகிணி சிந்தூரிக்கு கிடைத்த பணி இடமாற்றம், எனக்கு கிடைக்கவில்லை.
ஜாலஹள்ளியில், அவரது கணவர் பெரிய வீடு கட்டி இருக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது அசையா சொத்துகள் பற்றி தெரிவிக்க வேண்டும். ரோகிணி சிந்தூரி தெரிவிக்கவில்லை. அதுபற்றி எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது 19 குற்றச்சாட்டுகளை ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கூறி இருந்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலை செய்தபோது, அவருடன் ரோகிணி சிந்தூரியை இணைத்து பேசப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமாதான பேச்சு ஏன்?
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா நிருபர்களிடம் கூறுகையில், 'சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. மீது ரோகிணி சிந்தூரி குற்றச்சாட்டு கூறிவிட்டு, தற்போது, அவருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.எல்.ஏ. மற்றும் அரசியல்வாதிகளுடன் சமாதான பேச்சில் ஈடுபடுவார்கள். இதுபோன்று, ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சமாதானத்திற்கு செல்வதை முதல் முறையாக பார்க்கிறேன். நான் கூட பரப்பனஅக்ரஹாரா சிறையில் சில பிரபலங்களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது குறித்து குற்றச்சாட்டு கூறினேன். அதில் இருந்து பின்வாங்கவில்லை.
ரோகிணி சிந்தூரி மீது நான் 19 குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறேன். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரி எப்படி ஒரு எம்.எல்.ஏ.வுடன் சமாதான பேச்சுக்கு செல்லலாம் என்பதால், இந்த குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறேன். விசாரணைக்கு தான் வலியுறுத்துகிறேன். அரசு சார்பிலோ, பிற அமைப்புகள் சார்பிலோ விசாரணை நடைபெற்றால், என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வழங்குவேன், என்றார்.
பெண் அதிகாரிகள் மோதல்
ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும் இடையே திடீரென்று ஏற்பட்டுள்ள மோதலுக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. சொந்த விவகாரங்கள் காரணமாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகளில் சரியான விசாரணை நடைபெறாமலும், அவருக்கு சாதகமாக அரசு செயல்படுவதாகவும் ரூபா கருதுவதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ரூபாவின் குற்றச்சாட்டின் பேரில் அரசு விசாரணைக்கு உத்தரவிடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளான ரோகிணி சிந்தூரி, ரூபாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.