ஊழலில் ஈடுபட்ட பா.ஜனதா மந்திரிகளின் வீடுகளில் விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தியதா?- பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி
ஊழலில் ஈடுபட்ட பா.ஜனதா மந்திரிகளின் வீடுகளில் மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தியதா? என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.;
பெங்களூரு: ஊழலில் ஈடுபட்ட பா.ஜனதா மந்திரிகளின் வீடுகளில் மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தியதா? என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
லஞ்சத்தால் வெறுப்பு
பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபை தேர்தலின்போது கர்நாடகத்திற்கு வந்தார். அப்போது அவர் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?. பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். பா.ஜனதாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் என்பவர், பணம் வழங்கவில்லை என்று கூறி தற்கொலை செய்து கொண்டார்.மற்றொரு ஒப்பந்ததாரர் பசவராஜ் என்பவர் இந்த அரசின் லஞ்சத்தால் வெறுப்படைந்து கருணை கொலை செய்ய அனுமதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். தனியார் பள்ளி சங்கத்தினர் 40 சதவீத கமிஷன் கேட்பதாக இந்த அரசு மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினர். அதுகுறித்து பிரதமருக்கும் கடிதம் எழுதினர். இன்ஸ்பெக்டர் பணி இடமாறுதலுக்கு ரூ.70 லட்சம் லஞ்சம் வழங்க வேண்டி இருப்பதாக மந்திரி எம்.டி.பி.நாகராஜ் கூறினார்.
ஊழல் புகார்கள்
சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமன முறைகேட்டில் உயர் போலீஸ் அதிகாரிகள் சிறையில் உள்ளனர். கொரோனா பரவல் நேரத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு வாங்கிய உபகரணங்களில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் முறைகேடு செய்துள்ளார். மந்திரிகள் ஆனந்த்சிங், பைரதி பசவராஜ், சிவராம் ஹெப்பார், பி.சி.பட்டீல், கோபாலய்யா, பிரபு சவான் உள்ளிட்டோர் மீதும் ஊழல் புகார்கள் எழுந்துள்ளன.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் அரசுக்கு எதிரான குரல்களை ஒடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆனால் ஊழல் செய்த பா.ஜனதா மந்திரிகளின் வீடுகளில் மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தியதா?. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததா?.
பா.ஜனதா நிறைவேற்றவில்லை
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பா.ஜனதா நிறைவேற்றவில்லை. கர்நாடக பா.ஜனதா அரசுக்கு நாங்கள் இதுவரை 73 கேள்விகள் கேட்டுள்ளோம். அதற்கு இந்த ஆட்சியாளர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை. பா.ஜனதா அரசு மவுனமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் கெம்பேகவுடா நிறுவிய பெங்களூருவுக்கு பிரதமர் மோடி வருகிறார். கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும். கெம்பேகவுடா, கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளின் நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும். வால்மீகி ராமாயணத்தை எழுதினார். இதற்காக அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.