கவர்னர் மாளிகை சுதந்திரதின நிகழ்ச்சியில் கிராம தலைவிகளை அழையுங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கவர்னர் மாளிகை சுதந்திரதின நிகழ்ச்சியில் கிராம தலைவிகளை அழையுங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.;
புதுடெல்லி,
சுதந்திர தினத்தன்று கவர்னர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னர்கள் நடத்தும் 'அட் ஹோம்' நிகழ்வுக்கு கிராம தலைவிகள், வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் உறவினர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 'மன் கி பாத்' வானொலி உரையின் போது குறிப்பிட்ட நபர்கள் உள்ளிட்டவர்களை அழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று மாலையில் ராஷ்டிரபதி பவன் மற்றும் ராஜ்பவன்களில் கவர்னர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னர்களால் 'அட் ஹோம்' நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும். இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படுபவர்கள் உயர்தர தேநீர் விருந்தில் கலந்து கொள்வர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு 'அட் ஹோம்' நிகழ்வில் வழக்கமான நெறிமுறை அடிப்படையிலான அழைப்பாளர்களைத் தவிர, பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்பாளர்களை அழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களை வலியுறுத்தியுள்ளது.
பல்வேறு துறைகளில் சாதித்த மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றுநோயின் போது சமூகத்திற்கு முன்மாதிரியான பங்களிப்பைச் செய்தவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களித்தவர்கள், பிரதமரின் 'மன் கி பாத்' வானொலி உரையின் போது குறிப்பிடப்பட்டவர்கள், பத்ம விருது பெற்றவர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்கள், ஒலிம்பிக், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்கள், முன்னணி சுகாதாரப் பணியாளர்கள், துணிச்சலான குழந்தைகள் விருது பெற்றவர்கள், கிராம தலைவிகள், முதன்மையான மாணவர்கள், சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்டவர்களை இந்த விழாவுக்கு அழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இவர்களுக்காக குறைந்தபட்சம் 25 முதல் 50 அழைப்புகள் ஒதுக்கலாம் என்றும் அழைக்கப்படுபவர்களின் பெயர்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பரந்த அளவிலான மக்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக அழைக்கப்படுபவர்களின் பட்டியலை உருவாக்க ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.