சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது டெல்லி சிறப்பு கோர்ட்டில் 2½ ஆண்டுக்கு பின்பு அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூரு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது டெல்லி சிறப்பு கோர்ட்டில் 2½ ஆண்டுக்கு பின்பு அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அமலாக்கத்துறைக்கு மாற்றம்
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவருக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது ரூ.143 கோடிக்கு சட்டவிரோதமாக டி.கே.சிவக்குமார் சொத்து சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
மேலும் டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.8 கோடியே 59 லட்சம் சிக்கி இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததுடன், டி.கே. சிவக்குமார் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு வருமான வரித்துறையில் இருந்து அமலாக்கத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
டி.கே.சிவக்குமார் கைது
இது டி.கே.சிவக்குமாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 30, 31-ந் தேதிகளிலும், செப்டம்பர் 2 மற்றும் 3-ந் தேதிகளிலும் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தார்கள்.
பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு டெல்லி திகார் சிறையில் டி.கே.சிவக்குமார் அடைக்கப்பட்டார். அங்கு 48 நாட்கள் டி.கே.சிவக்குமாா் சிறைவாசம் அனுபவித்தார். பினனர் அவருக்கு, டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே நேரத்தில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், டி.கே.சிவக்குமாா் தனது மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் 317 வங்கி கணக்குகள் மூலமாக பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்திருப்பதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
மேலும் அவர் தனது வருமானத்தை காட்டிலும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல முறை டி.கே.சிவக்குமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி., தாய் மற்றும் குடும்பத்தினரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி இருந்தார்கள். டி.கே.சிவக்குமார் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டு 2½ ஆண்டுக்கு மேல் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிகையில் சட்டவிரோத பண பரிமாற்றம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்கள், டி.கே.சிவக்குமார், அவரது குடும்பத்தினாிடம் நடத்தப்பட்ட விசாரணை சம்பந்தப்பட்ட தகவல்களை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய நெருக்கடியில் டி.கே.சிவக்குமார்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் வெறும் விசாரணை மட்டுமே நடத்தி வந்த அமலாக்கத்துறையினர் தற்போது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதால், இந்த வழக்கில் கூடிய விரைவில் விசாரணை தொடங்கி நடைபெறும்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற சித்தராமையாவுடன் மறைமுகமாக டி.கே.சிவக்குமார் போட்டி போட்டு வருகிறாா். இந்த சந்தர்ப்பத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதால் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால், டி.கே.சிவக்குமாரின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.