பாலியல் புகார் தொடர்பான விசாரணை; டெல்லி கோர்ட்டில் பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷண் ஆஜர்

பிரிஜ் பூஷண் மீதான வழக்கு விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

Update: 2024-02-06 09:06 GMT

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பா.ஜ.க. எம்.பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷண் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இதையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரிஜ் பூஷண் ஆதரவாளரும், உத்தரபிரதேச மல்யுத்த சங்க துணைத் தலைவருமான சஞ்சய் சிங் வெற்றி பெற்று புதிய தலைவரானார்.

இதனிடையே பிரிஜ் பூஷண் மீதான வழக்கு விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்காக பிரிஜ் பூஷண் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் இன்று ஆஜராகியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்