சிக்கமகளூருவில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனைக்கு இடையூறு; பஜ்ரங்தள அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
சிக்கமகளூருவில், கிறிஸ்தவர்களின் பிரார்த்தனைக்கு இடையூறு செய்த பஜ்ரங்தள அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சிக்கமகளூரு;
பிரார்த்தனைக்கு இடையூறு
சிக்கமகளூரு மாவட்டம் கவுரிகாலுவே பகுதியில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 29-ந்தேதி இந்த தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தது. அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் பிரார்த்தனையில் கலந்து கொள்ள முடியாத மக்களுக்கு, சிக்கமகளூரு பார்லைன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பிரார்த்தனை நடத்தினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மேலும் 50-க்கும் அதிகமான இந்துக்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் பஜ்ரங்தள அமைப்பினருக்கு கிடைத்தது. இதையடுத்து பஜ்ரங்தள அமைப்பினர் ஓட்டலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களிடம் தகராறு செய்தனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பஜ்ரங்தள அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று பஜ்ரங்தள அமைப்பினர்களின் செயல்பாடுகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கிறிஸ்தவ அமைப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்தராவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பெற்று கொண்ட போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்திரா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.