வாக்குசாவடி ஊழியர்கள் என அட்டை வினியோகித்த விவகாரம்: மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் 17 பேரிடம் விசாரணை
சிலுமே நிறுவன ஊழியர்களுக்கு வாக்குசாவடி ஊழியர்கள் என அட்டை வினியோகித்த விவகாரத்தில் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் 17 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.;
பெங்களூரு:
பணி இடைநீக்கம்
பெங்களூருவில் வாக்காளர் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே என்ற நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார், அவரது சகோதரர் கெம்பேகவுடா உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி தலைமை தேர்தல் ஆணையம், கர்நாடக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் வாக்காளர் தகவல்களை திருடப்பட்ட விவகாரத்தில் மகாதேவபுரா தொகுதி மாநகராட்சி சிறப்பு கமிஷனர் சீனிவாஸ், சிக்பேட்டை மற்றும் சிவாஜிநகர் தொகுதிகளின் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ரங்கப்பா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதே நேரம் மகாதேவபுரா, சிக்பேட்டை, சிவாஜிநகரில் வாக்காளர்கள் பெயர்களை சேர்ப்பது, தேவையில்லாத பெயர்களை நீக்குவதற்காக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
17 அதிகாரிகளிடம் விசாரணை
இந்த நிலையில் பெங்களூரு தெற்கு தொகுதியில் உள்ள உத்தரஹள்ளி, கோண்னகுண்டே, பேகூர், வசந்தபுரா, சுப்பிரமணியபுரா, எலச்சனஹள்ளி, அஞ்சனபுரா, பேகூர், காலேனஅக்ரஹாரா பகுதிகளில் 45 ஆயிரத்து 927 வாக்காளர்களின் பெயர்களை சிலுமே நிறுவனம் நீக்கியது தெரியவந்து உள்ளது. அந்த தொகுதியில் 6 லட்சத்து 42 ஆயிரத்து 354 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கிடையே மாநகராட்சியின் வாக்குச்சாவடி ஊழியர்கள் என்று கூறி சிலுமே நிறுவன ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து இருந்தனர்.
இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சிலுமே நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் வாக்குச்சாவடி ஊழியர்கள் என அட்டை வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சியின் வருவாய்த்துறை அதிகாரிகள் 17 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.