மணிப்பூரில் பதற்றம் தணிந்தது.. 5 மாவட்டங்களில் இணைய சேவை தடையை நீக்கியது அரசு

எதிர்காலத்தில் இணைய சேவைகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்தும் செயல்களில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Update: 2024-09-16 12:30 GMT

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு, இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின. இதனால், அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். தாக்குதல்களை தடுக்க தவறிய டி.ஜி.பி. மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டத்தின்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்னுபூர், தௌபால் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 10-ம் தேதி மாலை 3 மணி முதல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.

அதன்பின்னர் பதற்றம் ஓரளவு தணிந்ததையடுத்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு இணைய தடையை நீக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி, 5 மாவட்டங்களிலும் இணைய சேவைக்கான தடை இன்று நீக்கப்பட்டது. இணைய பயனர்கள் கவனத்துடன் செயல்படவேண்டும் என்றும், எதிர்காலத்தில் இணைய சேவைகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்தும் செயல்களில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்த மாநில அரசு, இணையதள தடையை நீக்க முடிவு செய்ததாக உள்துறை ஆணையர் அசோக் குமார் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்