இரட்டை கொலை வழக்கில் இணைய சேவை நிறுவன அதிபர் அதிரடி கைது
இரட்டை கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட இணைய சேவை நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
பெங்களூரு:
பெங்களூரு அம்ருதஹள்ளி பகுதியில் ஐ.டி. நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தின் அதிபர் பனிந்திரா சுப்பிரமணியா (வயது 36). இங்கு விணுகுமார் என்பவர் தலைமை செயல் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரையும் அலுவலகத்தில் புகுந்து மர்மநபர்கள் படுகொலை செய்தனர். இதுகுறித்து அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், இரட்டை கொலை வழக்கில் துமகூரு மாவட்டம் குனிகல்லில் பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஜோக்கர் பெலிக்ஸ், வினய் ரெட்டி, சந்தோஷ் என்பதும், இதில் ஜோக்கர் பெலிக்சும், பனிந்திராவும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியதும், அவரை பனிந்திரா பணிநீக்கம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இரட்டை கொலைக்கு மூளையாக செயல்பட்டது இணைய சேவை வழங்கி வரும் 'ஜி-நெட்' என்ற நிறுவனத்தின் அதிபர் அருண் தான் என்பது தெரியவந்தது. அதாவது, அருணின் 'ஜி-நெட்' நிறுவனத்தில் பனிந்திரா, விணுகுமார், ஜோக்கர் பெலிக்ஸ் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். இதில் பனிந்திரா மனிதவள அதிகாரியாக பணியாற்றினார். அப்போது ஜோக்கர் பெலிக்சின் தவறான நடவடிக்கையால் அவரை பனிந்திரா பணி நீக்கம் செய்துள்ளார்.
இதையடுத்து பனிந்திராவும், விணுகுமாரும் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஏரோனிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். அத்துடன் ஜி-நெட் நிறுவனத்தில் பணியாற்றிய பலரையும் பனிந்திராவும், விணுகுமாரும் தங்களது நிறுவனத்தில் சேர்த்துள்ளனர். இது ஜி-நெட் நிறுவன அதிபரான அருணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னிடம் வேலை பார்த்தவர்கள் தனக்கு போட்டியாக நிறுவனத்தை தொடங்கியதால் அவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.
இதனால் தனது திட்டத்துக்கு ஜோக்கர் பெலிக்சை பகடைக்காயாக பயன்படுத்தவும் அருண் முடிவு செய்தார். இதையடுத்து ஜோக்கர் பெலிக்சை தனது நிறுவனத்தில் அருண் மீண்டும் பணியமர்த்தினார். அதன்பிறகு பனிந்திரா மீது ஜோக்கர் பெலிக்ஸ் இன்னும் கோபத்தில் இருப்பதை அருண் அறிந்து கொண்டார். பின்னர் தனது திட்டம் குறித்து ஜோக்கர் பெலிக்சிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பனிந்திரா, விணுகுமாரை கொலை செய்ய கடந்த 6 மாதங்களாக அவர்கள் திட்டம் தீட்டினர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜோக்கர் பெலிக்ஸ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பனிந்திராவின் நிறுவனத்துக்குள் புகுந்து அவரையும், விணுகுமாரையும் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜி-நெட் நிறுவனத்தின் அதிபர் அருணையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் ஆம் ஆத்மி பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கைதான அருணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு மாதமாக ஒத்திகை பார்த்த கொலையாளிகள்
பெங்களூருவில் தனியார் நிறுவன அதிபர் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கொலை சம்பவம் நடந்த கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள சாலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த கட்டிடத்தில் இருந்து கொலையாளிகள் 3 பேரும் வேகமாக ஓடிவந்து, காரில் ஏறி தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கைதான ஜோக்கர் பெலிக்சும் அவரது கூட்டாளிகளும் கொலை செய்துவிட்டு தப்பிப்பதற்காக கடந்த ஒரு மாதமாக ஒத்திகை பார்த்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று அவர்கள் மோட்டார் சைக்கிளில் நிறுவனத்துக்கு வந்து, கொைலயை அரங்கேற்றிவிட்டு பின்பகுதியில் நிறுத்தி இருந்த வாடகை காரில் லாவகமாக தப்பித்து சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் இந்த அருண்?
இரட்டை கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜி-நெட் நிறுவனத்தின் அதிபர் அருண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர், எம்.எல்.ஏ.க்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர் தனது தொழிலுக்கு போட்டியாக வருபவர்களை மிரட்டி வந்துள்ளார். மேலும் அவர் தன்னை சமூக ஆர்வலராக காட்டி கொண்டு நாடகமாடி வந்துள்ளார். அவர் கபடி போட்டிகளையும் நடத்தி உள்ளார். இவர் தனது அலுவலகத்தில் பணி செய்த பலரையும் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை போலீசார் கைது செய்து ஜீப்பில் அழைத்து சென்றபோது, போலீசார் அவரது தோளில் கை போட்டு சகஜமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.